Social. Political. Economic. Career| Seyed Ibrahim

Serious issues & ideas. Trusted Sources.

மோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்

leave a comment »

Here is an email that elaborates the difficulties and aspirations of Mu’azzins. Though I am not in agreement with everything, this is worth sharing.

மொவ்தீன் (மோதினார் அப்பா)என்றல்லாம் நாம் அழைப்போமே அந்த அப்பா நம்மோடு சிறிது மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்.

அஸ்ஸாலாமு அலைக்கும்.என்ன தம்பி எப்படி  இருக்கீங்க என்னை பற்றி உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு எதோ நீங்க கேட்கிறீங்க அதனால் சொல்றேன்.

தம்பி இந்த பள்ளியில நான் கடந்த 7 வருசமா இருக்கிறேன்.நான் இந்த ஊருக்கு புதுசா தான் வந்தேன். எனக்கு வட மாவட்டத்தை சேர்ந்த தஞ்சாவூரை சேர்ந்தவன்.நான் செய்யற வேலை எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு ஆன வேற வழியில்லை.செய்து தான் ஆகணும்.என்ன தம்பி அப்படி பாக்குறீங்க இறை இல்லத்தின் வேலையை கஷ்டம் நு சொல்றாரேன்னு பாகுரீங்கள ?

பின்ன என்ன தம்பி காலைல 4 மணிக்கெல்லாம் எழுந்து எனது அடிப்படை கடமைகளை முடிச்சிட்டு பள்ளியை திறந்து லைட் எல்லாம் போட்டு விட்டு பாங்கு சொல்லணும்.அதற்க்கு முன் ஒழு செய்ய தண்ணீர் போதுமானதா கழிப்பறைக்கு தண்ணீர் போதுமானதா என்று பார்க்கணும் சில நேரங்களில் இமாம் இல்லையன்றால் நானே தொளவைக்கவேண்டும்.அதெல்லாம் முடிந்த பின்னர் லைட் அணைத்துவிட்டு பள்ளியை பூட்டிவிட்டு கரி கடைக்கு ஆடு அறுப்பதற்காக போக வேண்டும் அங்கு போனால் எதோ 10 முதல் 50 வரை கிடைக்கும்.அப்பறமா வந்து பள்ளியை சுத்தம் பண்ணனும் கழிப்பறை வரை சுத்தம் செய்த போதே லுஹ்ர் தொழுகைக்கான வேளை வந்து விடும்.பாங்கு சொல்லிட்டு அந்த தொழுகை முடிந்தவுடன் சாப்பாடு  பின்னர் சிறிது நேரம் தூங்க முயற்சி செய்வேன் அதில் பல நேரங்களில்  நாய்கள் கபுரில் வந்து தோண்டும்  அதை விரட்டி விடனும் சில நேரம் நல்ல தூங்கிடுவேன் அப்பறமா அஷர் ஜமாத்துக்கான வேளை நெருங்கி விடும் உடனே எழுந்து பாங்கு சொல்லி விட்டு தொழுகை கடமைகளை முடித்து விடுவேன் பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீர் எல்லா   இடங்களிலும் போதுமானதாக உள்ளதா என்று பார்த்து மோட்டரை போடுவேன்.தண்ணீர் நிறைந்த வுடன் அணைத்து விட்டு சிறிது நேரம் ரோட்டில் வந்து நிற்ப்பேன்.

பின்னர்  மக்ரிப் நேரம் வந்து விடும் பாங்கு சொல்லி தொழுகையை நிறைவேற்றிவிட்டு வெளியே சில வீடுகளில் என்னை அழைப்பார்கள் குரான் ஓதுவதற்கு (பாத்திஹா ஓதுவது இப்போது குறைந்து விட்டது [This an innovation in religion. So, good riddance. But, this adds to the misery of those who dependent on them. They need to be helped]) அதில் 20 முதல் 30 ருபாய் வரை கிடைக்கும் எல்லா  நேரமும் கிடைப்பது இல்லை  பின்னர் இஷா தொழுகைக்கான வேளை வந்து விடும் பாங்கு சொல்லி விட்டு ஜமாத் முடிந்த வுடன் பள்ளியில் சிறிது நேரம் இருந்து பள்ளியில்  ஏதும் பிரச்சினைகள் இருந்தால் முத்தவல்லியுடன் சொல்லிவிட்டு குரான் ஓதிவிட்டு சாப்பிட போய்விடுவேன்.சிறிது நேரம் மனைவியுடன் பேசிவிட்டு தூங்க போனால் மறுபடியும் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு கபுரை ஒருமுறை பார்த்துவிட்டு நாய்களை விரட்டி விட்டு வந்து படுப்பேன்.மறுபடியும் நேற்று நடந்தது போல எல்லா நிகவுகளும் தொடரும்.

இதுல எனக்கு இன்னும் சில முக்கிய வேலைகள் உண்டு அது தினமும் வருவது இல்லை ஆனால் சில குளிர் காலங்களில் ஏற்படும் மவுத்(இறப்பு) ஒரே நாளில் 3 ஜனாசாகளும் வருவதுண்டு.சில வீடுகளுக்கு நாம் சென்று தான் கசப் மாற்றுவதில்  இருந்து ஜனாஸாவை குளுப்பாட்டி கபன் துணி இட்டு அடக்கம் செய்து பின்னர் பாங்கு சொல்லி துவா செய்து அன்று முதல் 40 நாட்களுக்கு (வருட)பாதிஹா ஓதுவது குரான் ஓதுவது போன்ற பணிகளும் இருக்கும் இதில் கொஞ்சம் பைசா கிடைக்கும் அதுவும் இயக்கங்களின் வருகையினால் குறைந்து விட்டது.இது போக யாரவுது எனக்கு பெருநாள் நேரங்களில் துணி எடுத்து தருவார்கள்.கை செலவிற்கு காசு தருவார்கள் சில நேரங்களில் சாப்பாடு தருவார்கள்.

என்னை ஏளனமாக பார்பவர்களும் பேசுபவர்களும் உண்டு.இதெல்லாம் போக பள்ளியில் சில நேரங்களில் பாங்கு சொல்ல சில வினாடிகள் பிந்தினாலும் என்னை ஜமாத்தை சேர்ந்த பெரியவர்களும் முக்கியஸ்தர்களும் திட்டிவிடுவார்கள். இதில் ரமலான் மாதம் வந்துவிட்டால் எனக்கான வேலைகள் அதிகரித்துவிடும்.

கஞ்சி போடுவதற்கான பொருட்களை நானே சில நேரங்களில் வாங்கி கொடுக்க வேண்டும்.மாலையில் கஞ்சி விநியோகிக்கும் போது நானும் நிக்க வேண்டும் பின்னர் நோன்பு திறக்கும் நேரம் நெருங்கும் போது பாய் விரிப்பது தண்ணீர்,பேரிச்சம்பழம்,வடை இருந்தால் அது மற்றும் கிளாஸ்,கோப்பை எல்லாம் எடுத்து கழுவி வருசையாக வைக்க வேண்டும்.நோன்பு திறக்கும் நேரம் நெருங்கியவுடன் பாங்கு சொல்ல வேண்டும்.உடனே தண்ணீர் குடித்துவிட்டு பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு இக்காமத் சொல்ல நேரமாகி விடும்.ஜமாத் முடிந்த பின்னர்தான் சிறிது கஞ்சி குடிக்க வாய்ப்பு கிடைக்கும்.எனது ஏழு வருட அனுபவத்தில் நான் எனது மனைவி குழந்தைகளுடன் நோன்பு திறந்தது 2 அல்லது 3 நாட்கள் தான் இருக்கும்.மேலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட நான் ஓய்வு எடுத்ததும் 2 அல்லது 3 நாட்கள்தான் எனக்கு வாரவிடுமுறை கிடையாது வேளி ஊர் சொந்த பந்தங்களின் விசெசங்களுக்கும் போயி வந்தது கிடையாது எனது சொந்த ஊருக்கு கூட வருடத்தில் ஒருமுறை தான் போக முடியும் அதுவும் சில பள்ளிகளில் அனுமதிக்க மாட்டார்கள்.

இப்படியல்லாம் கஷ்டப்படும் எனக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா 3000 தான் [In some Masjids, it is even less] ஏழு வருடம் கழித்து 500 கூடுதலாக தர  நிரவாகத்தில் முடிவு செய்து இருப்பதாக கேள்விப்பட்டு சந்தோசப்பட்டேன்.மேலும்  நோன்பு 27 ஆம் இரவு 5000 ருபாய் வரை கிடைக்கும்.தினமும் கறிக்கடையில் கிடைப்பது வீடுகளில் குர்ரான் ஓதுவதில் கிடைப்பது எல்லாம் சேர்த்து 1000 முதல் 1500 வரை கிடைக்கும்.ஹஜ்ஜு பெருநாளில் 500 ருபாய் மற்றும் பித்ரா அரிசி உடுக்க துணி கிடைக்கும்.அதனால தான் தம்பி நான் என்னோட வேலைய இவ்வளவு கஷ்டமா அலுத்துக்கிட்டு சொன்னேன்.

இவ்வளவு நேரம் நான் சொன்னத நீ கேட்டியே இதுவே எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா இந்த மாதிரி யாரவுது கேட்டாலே அதுவே பெரிய சந்தோசம்.தம்பி இன்னும் சில வருடங்களில் இந்த வேலைக்கு யாருமே முன்வரமாட்டர்களோ என்று யோசிக்க தோனுகிறது.ஏனென்றால் 5 வேளை தொழுகை,ஜனாஸா தொழுகை,30 நாளும் தராவியா தொழுகை நிக்காஹ் நடத்தி வைப்பது இவைகளை மட்டுமே செய்யும் இம்மாம்களுக்கு   சம்பளம் அதிகம் நோன்பு கால பணமும் அதிகமாக வழங்கபடுகிறது.மேலும் இமாம்களை சில தனவந்தர்கள் ஹஜ்ஜு க்குகூட அனுப்பி வைக்கிறார்கள், அரசாங்கம் கூட உலாமா நலவாரியம் அமைத்து இருகின்றது எங்களையும் இந்த சமுதாயம் கண்ணியத்தோடு பார்க்காதா எங்களுக்கான சம்பளம் உயர்த்தி தரப்படுமா   என்ற பல கேள்விகளோடு  என்னுடைய ஏக்கம் தொடர்கிறது…………………………………?

தம்பி இஷா பாங்கு சொல்ல 1 நிமிடம் தாமதமாகி விட்டது அய்யய்யோ நான் வர்றேன் தம்பி என்று சொல்லிக்கொண்டே வேகமாக பள்ளியின் மைக்கை நோக்கி ஓடுகிறார் எனது மோதினார் அப்பா..

சகோதரர்களே எனது உறவினர் ஒருவர் ஒவ்வொரு ரமலானுக்கும் மோதினார் அவர்களுக்கு தனியாக தான் பணம் வழங்குவதாகவும் மோதினாரின் பணிகளை பற்றியும் என்னோடு சில விசயங்களை பகிர்ந்துகொண்டார்.இந்த கட்டுரையின் நோக்கம் எந்த ஜமாதார்களையும் குறை கூறுவது அல்ல மாறாக மோதினார்களுக்கும் நாம் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது என்பதை சுட்டி காட்டவே எழுதப்பட்டது.சில ஜமாத்தார்கள் நல்ல கண்ணியத்துடனேயே அதிகம் சம்பளமும் வழங்குகிறார்கள் ஆனால் பெரும்பாலனா ஜமாத்தின் நிலை ?

இதற்க்கு நிரந்தர தீர்வு காண என்னுள் தோன்றிய சில யோசணைகள்.

  • எல்லா ஜமதார்களும் சேர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே சம்பள நிர்ணயம்.
  • மோதினார்களுக்கான ஒரு பைத்துல்மால் அமைப்பது அதில் இமாம்களையும் சேர்த்துகொள்ளலாம்
  • வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தி வழங்குவது
  • நோன்பு காலங்களில் ஊர்மக்கள் சார்பாக பிரியும் தொகையை இமாம்களைவிட அதிகமாக வேலை செய்யும் மோதினார்களுக்கு இமாம்களுக்கு நிகராக வழங்குவது.
  • வருடத்திற்கு ஒருமுறை 30 நாட்களாவுது விடுமுறை வழங்குவது.
  • நோன்புகாலத்தில் பள்ளியை சுத்தம் செய்ய வேலை ஆள் நியமிப்பது

கண்ணியத்திற்கு உரிய சகோதரர்களே இந்த ரமலான் மாததிலாவுது நம்ம முகல்லாவை சேர்ந்த மோதினார் அப்பாவுக்கு உதவி தொகையை கூடுதலாக வழங்க சொல்லவேண்டும் அவர்களின் மாத சம்பளத்தையும் அதிகரிக்க ஜமாத்தை வலியுறுத்த வேண்டும்.

Short URL: http://wp.me/pmMJ0-fB

Written by S Ibrahim

2011-09-11 at 12:03 PM

Leave a comment